இந்திய வரலாற்றில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தின் ஏவுகணை இஸ்ரோ மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான விக்ரம்-எஸ் என்ற ஏவுகணை இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இஸ்ரோ மூலம் ஏவப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Prarambh – the beginning என்ற புதிய திட்டத்தின் படி தனியார் நிறுவன ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இஸ்ரோ விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இந்திய விண்வெளி வரலாற்றில் மறக்க முடியாதவராக விளங்கும் விக்ரம் சாராபாயை கௌரவப்படுத்தும் விதமாக அவருடைய பெயரில் ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் எலன் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக விண்வெளி ஆராய்ச்சியை செய்து வருகிறார். அரசின் கீழ் இயங்காமல் தனியாகவும் விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க முடியும் என்ற உந்துதலை கொடுத்தவர் மஸ்க். அவருடைய பாணியில் இந்தியாவிலும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அம்பானி, அதானி போன்ற பெரும் புள்ளிகளின் நிறுவனங்கள் தயாரிக்கும் ராக்கெட்டுகள் இஸ்ரோ மூலம் விண்ணுக்கு செலுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.