சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு நடிக்க வந்த புதிதில் வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ரஜினியை யாரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க மாட்டார்கள். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் அதிகம் பேரை ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகனாக பெற்றிருக்கவில்லை.
ரஜினிகாந்தின் ஆஸ்தான குருநாதர் பாலச்சந்தர். இவர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் ரஜினியிடம் ஹிந்தியில் வெளியான கோல் மால் படத்தை போட்டு காண்பித்து தம்பி இந்த படம் நம்ம பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனென்றால் ரஜினிகாந்த் அதுவரை முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்ததே இல்லை.
நம்ம காமெடி பண்ணுனா நிச்சயம் ரசிகர்கள் இந்த படத்தை ஏத்துக்க மாட்டாங்க என்று நினைத்தார். நாகேஷ் அல்லது கமலஹாசன் இந்த படத்தில் நடித்தால் நல்லா இருக்கும் என்று எல்லோரும் பாலச்சந்தரிடம் சொல்லி இருக்கிறார்கள். இல்லப்பா, இந்த படம் நிச்சயம் ரஜினி தான் பண்ணணும், ரஜினி பண்ணுனா ரசிகர்கள் இந்த படத்தை ஏத்துக்குவாங்க என்று ஆணித்தனமாக ரஜினியை அந்த படத்தில் நடிக்க வைத்தார் பாலசந்தர்.
ரஜினியும் தன்னுடைய குருநாதருக்காக மறுபேச்சு பேசாமல் அந்த படத்தில் நடித்துக்கொடுத்தார். ரஜினிகாந்தின் திருமணத்திற்கு பிறகு வெளியான முதல் படம் தான் இந்த தில்லு முள்ளு. ரஜினிகாந்த் மீசை இல்லாமல் நடித்த முதல் படமும் இது தான். படம் வெளியான பிறகு ரசிகர்கள் தில்லு முள்ளு படத்தை ஆஹா ஓஹோ என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். ரஜினியே படம் இந்த அளவு வரவேற்பை பெறும் என்று நினைக்கவில்லை.
அசல் படமான கோல் மால் படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு தில்லு முள்ளு படம் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு தான் ரஜினிகாந்த் தான் நடிக்கும் படங்களில் தனக்கென சில காமெடி ட்ராக்குகளை வைக்க வேண்டும் என்று இயக்குநர்களிடம் கோரிக்கை வைப்பார்.. ரஜினிகாந்த்தின் இந்த பாலிசியை தான் இப்போ இருக்கும் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பின்பற்றுகிறார்கள்.