ஆசிரியர் மாணவர் உறவு எப்பொழுதும் சிறப்பானது. ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களுக்கு தேவையான கல்வி முழுதும் அவர்களிடம் எடுத்துச் செல்ல நினைக்கின்றனர். அவ்வாறு மாணவர்கள் கல்வி கற்றலில் அவர்களுக்கு இருக்கும் இடையூறுகளை அறிந்து அதற்கேற்றவாறு பாடம் சொல்லித் தருகின்றனர்.
இந்நிலையில் கோவைப்புதூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் செய்த செயல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோடை கால விடுமுறை தொடங்கியதால் அந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் நல்ல பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என நினைத்துள்ளார்.
அதில் குறிப்பாக மாணவர்கள் தங்களுக்கு இடையேயான வாசிப்பு திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் பள்ளியில் படித்து வரும் 100 மாணவர்களை கோவைப்புதூரில் அமைந்திருக்கும் அரசு நூலகத்தில் அந்த மாணவர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளார் .
நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கான கட்டணத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களான விஜயகுமார் மற்றும் யுவராஜா இருவரும் தனது சொந்த பணத்தில் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அந்த 100 மாணவர்களும் தினமும் நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும். அந்த மாணவர்களும், தலைமை ஆசிரியரும் சேர்ந்த வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கியுள்ளனர். அந்த வாட்ஸ்அப் குழுவில் தினசரி படித்த புத்தகங்களைப் பற்றிய விவரங்களை தலைமை ஆசிரியர்களுடன் அந்த மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை தந்த அரசு நூலகரான விஜயன் இதை மிகவும் பாராட்டியுள்ளார். தலைமையாசிரியர்கள் மாணவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு மிகவும் சிறப்பானது என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வகுப்பறை நூலகம் என்ற திட்டத்தில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு உதவியாக அந்தப் பள்ளிக்கு நூல்கள் வழங்குவதாகவும் நூலகர் தெரிவித்துள்ளார்.