இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.
பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் நெல்சன் படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் சற்று யோசித்து அதன் பின்னர் பல நிபந்தனைகளுடன் அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்சனும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படத்தை தர வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை செய்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நடிகை ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிப்பதாக கூறிவரும் நிலையில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் போன்றோர் இந்த படத்தில் நடிப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதோடு கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலந்து கொண்டார். அந்தப் பேட்டியில் தலைவர் 169 படத்தில் நடிப்பதைப் பற்றி கேட்டபோது இதுவரையிலும் அந்தப் படத்தில் நடிப்பது பற்றி நெல்சன் என்னிடம் எதுவும் பேசவில்லை எனவும் தற்போதுதான் இந்த படத்தின் ஆரம்பக்கட்ட நிலை எனவே இது பற்றி எதுவும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.