வளைகுடா நாடுகளில் அரேபியன் உணவகங்களில் கிடைக்கும் சவர்மாவை விட, இந்தியர்கள் செய்யும் சவர்மா சுவை வேறு மாதிரியாக இருக்கும். இந்திய உணவகங்கள் சுவை கூட்ட மயோனைஸ் அதிகமாக்கி, உப்பு, காரம் கொஞ்சம் மசாலாக்களையும் சேர்த்து விற்க தொடங்கிவிட்டார்கள். சில இடங்களில் சவர்மா சுவை நாக்கிற்கு பிடித்த மாதிரியே இருந்தது. அதற்கு காரணம் மயோனைஸ். அது முட்டையும், எண்ணெயும் கலந்து அப்படியே பச்சையாக செய்யப்படுகிறது.
ஒருமுறை ஷவர்மா கடைக்கு பின்னால் நின்று கொண்டிருந்தேன். ஊழியர்கள் மாலை உணவிற்கு தயாரிப்பு வேலையில் இருந்தனர். அப்போது ஒருவர் முட்டைகளை உடைத்து மிக்ஸியில் போட்டார். பின் மிக்ஸியை ஓடவிட்டு ஒரு பாக்கெட் எண்ணெய் எடுத்து மிக்ஸி ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே ஊற்றிக்கொண்டிருந்தார். முழுவதும் ஊற்றிய பின், அதன் பக்குவத்தை கையில் தொட்டு சுவைத்துப் பார்த்தார். பக்குவம் சரியில்லை போலும், விரலை உடையில் துடைத்துக்கொண்டு மிக்ஸியை நிறுத்தாமல் ஓடவிட்டார். மீண்டும் அதே போல சுவைத்துப்பார்த்தார்.
சமைத்த உணவாக இருந்தால் கூட சொல்லலாம். அவர் தயார் செய்தது மயோனைஸ். அது அப்படியே வெறும் முட்டையில் தயார் செய்யப்படுவது. அதனை விரலில் தொட்டு நக்கினால், இரவுக்குள் புளித்துவிடும். அங்கு சவர்மா சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன். ஷவர்மாவிற்கு செய்யப்படும் இறைச்சி, வெறும் தணலில் மட்டுமே வேகுவதால் அதில் உள்ள பாக்டீரியா சரிவர அழிவதில்லை. ஷவர்மாவில் மாமிசத்தை மசாலா பொருட்களில் அதிக நேரம் ஊற விடுவதால் சீக்கிரம் கிருமி பரவிவிடுகிறது.
இதனை சாப்பிட்டு பாதிப்பு உண்டான உடனே ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தால் மட்டுமே பாக்டீரியாக்களை அழிக்க முடியும். அதை விடுத்து வீட்டு வைத்தியம் செய்தால், விஷத்தன்மை குடலை காயப்படுத்தி, கிருமிகள் இரத்ததில் நுழைந்து விடும். நீர் சத்து குறைபாடு அதிகமானால், இதயம் மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். வெயில் காலங்களில் கடைகளில் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்