2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த கீதாஞ்சலி படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியா நெட் விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள படங்களைத் தொடர்ந்து தமிழில் 2015ஆம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதற்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜனி முருகன் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் பிரபலமானார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். தொடரி, பைரவா, ரெமோ, சாமி2, சர்க்கார், அண்ணாத்த போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் செல்வராகவனுடன் சேர்ந்து நடித்த சாணி காயிதம் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சர்க்காரு வாரிபாட்டா திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம் சரண் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். தளபதி66 படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண் இருவேடங்களில் நடிப்பதாகவும் இரு வேடங்களுக்கு கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.