நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு வினோதமான சட்டம் அமலுக்கு வருவது வழக்கம். அந்த சட்டம் இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. நண்டுகளுக்கு வழிவிட்டு மக்களுக்கு ரெட் சிக்னல் போடும் அந்த விசித்திரமான பழக்கம் அமல்படுத்தப்பட ஒரு முக்கிய காரணம் உள்ளது.

கிறிஸ்துமஸ் தீவு என்று அழைக்கப்படும் மிக அற்புதமான நண்டுத்தீவு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. இந்த தீவில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் வாழ்ந்து வருகின்றன. அவை ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்க காலத்தில் காட்டுப்பகுதியில் இருந்து கடற்கரை நோக்கி கூட்டமாக பயணம் செய்யும்.

சாலைகளில் ஆண் மற்றும் பெண் நண்டு இரண்டும் ஒன்று சேர்ந்து கடலுக்கு பயணித்து அங்கு முட்டையிட்டுவிட்டு வரும். முட்டைக்குள் இருந்து வெளியே வரும் குஞ்சுகளில் பெரும்பாலானவை மீன்களால் உண்ணப்படுவதால் எஞ்சியுள்ளவை மட்டுமே காட்டுக்கு செல்கின்றன. சிவப்பு நண்டுகள் மிகவும் அரிதானவை என்பதால் அவற்றை து ன்புறுத்தாமல் இருப்பதற்காக ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு பிறகு சாலைகளில் மக்கள் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

நண்டுகள் கூட்டமாக நகர்ந்து செல்லும் பகுதிகளில் வாகனப்போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்படும் இந்த சட்டம் நடப்பு ஆண்டிலும் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அவர்களின் நடவடிக்கை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.