1975ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்தவர் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜிகணேசன். 1975ஆம் ஆண்டுக்கு பிறகு எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதை முழுவதும் நிறுத்திவிட்டு அரசியல் பக்கம் நகர்ந்தார். சிவாஜி கணேசன் எப்பவும் போல தன்னுடைய வழக்கமான பாணியில் நடித்துக்கொண்டிருந்தார்.
அந்த 1975 ஆண்டில் கமல் ஒரு வளரும் நடிகர். அவர் நடிக்கும் படங்கள் வெற்றிபெறும் அளவுக்கு மக்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகராக வலம்வந்தார் கமலஹாசன். இந்த வருடத்தில் தான் ஒரு புதுமுக நடிகர் அறிமுகமானார். அவர் வேறு யாரும் இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். முதன் முதலில் ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள்.
1976 ஆம் வருடம் மூன்று முடிச்சு என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். 1977 முதல் 1980 வரை 60 படங்களில் தொடர்ந்து நடித்தார் ரஜினிகாந்த். வருடத்திற்கு 15 படங்களுக்கு மேல் ரஜினிகாந்த் நடிப்பில் படங்கள் வெளிவந்தன. அந்த காலத்தில் ரஜினிகாந்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பார். அதாவது தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் படங்களில் தான் ரஜினிகாந்த் நடித்தார்.
காயத்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், தப்பு தாளங்கள், அவள் அப்படித்தான், ஆறிலிருந்து அறுபதுவரை, ஜானி போன்ற படங்கள் ரஜினிகாந்த்தின் முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தின. 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த நடிப்பில் பில்லா படம் வெளியானது. இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால் 1981 ஆம் ஆண்டு முரட்டுக்காளை படத்தில் நடித்தார் ரஜினி. அதன் பிறகு இவருடைய சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு பிறகு சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் நடிக்க இவரால் மட்டுமே முடியும் என்று ரசிகர்கள் நம்பத்தொடங்கினர்.
இன்றுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை விட ரசிகர்கள் தன்னிடம் என்ன விரும்புவார்கள் என்ற கோணத்திலேயே நடித்துவருகிறார். ஒருவேளை ரஜினிகாந்த் பில்லா மற்றும் முரட்டுக்காளை படத்திற்கு பிறகு தன்னுடைய பழைய பாணியிலேயே நடித்திருந்தால் இன்று அவரும் ஒரு உலகநாயகனாக வலம்வந்திருப்பார்.