notification 20
Spellbound
தோனிக்கு முடிவு காலம் எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டதா? அவரைச் சொல்லி குற்றமில்லை! இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே!

தோனியின் வெறித்தனமான இரசிகர்கள், இந்த ஐ.பி.எல் சீசனை பார்க்கும் போது, கண்ணீர் வடிக்கின்றனர். தன்னால் முடியாத கட்டத்திலும், வீம்புக்கு இறங்கி தினம் தினம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து வருகிறார். ஒரு காலத்தில் தோனி என்றாலே அனல் பறக்கும். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு தான் தீ கொழுந்துவிட்டு எரிந்தாலும், ஒரு கட்டத்தில் உக்கிரம் தணிந்தே தீரும். இறுதியில் வெறும் தனலாக இருப்பது எதற்கும் பிரயோஜனம் இல்லை. மீறி அதே நிலையில் தொடர்ந்தால் எதற்கும் பயன்படப்போவதில்லை என்று சொல்லி தண்ணீர் ஊற்றி அணைத்து விடுவார்கள்.

அந்த நிலைக்கு போக வேண்டுமா என்ன? சந்தேகமே வேண்டாம்! இந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பலுக்கு தோனியின் தோல்வியும் முக்கிய காரணம். கங்குலி இருந்த காலத்தில், இளம் வீரரான தோனியிடம் ஸ்பார்க் தெரிந்து எப்படி அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டாரோ, அதே போல இன்னைக்கு பல இளம் வீரர்களிடம் ஸ்பார்க் உருவாகியிருப்பதை தோனி ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். வந்தால் ராஜாவாக தான் வருவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்த சீசனில் இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இனி இந்திய அணியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதை, நடராஜன் போன்ற சூறாவளி ஆட்டக்காரர்கள் நிரூபித்துவிட்டனர். எந்த இடத்திலும் நாம் தோனியின் அனுபவத்தை குறை சொல்லப்போவதில்லை. அடுத்த தலைமுறைக்கான தலைவனை உருவாக்கும் பொறுப்பை தோனி கையிலெடுக்க வேண்டும். அநியாயத்துக்கு முக்கியமான நேரங்களில் ஆட்டமிழந்து விடுகிறார்.

350 போட்டிகளில் விளையாண்ட முதிர்ந்த அனுபவம் கொண்டவராக இருந்தாலும், கடந்த வருடமே தோனியின் ஆட்டம் சரிவை காண ஆரம்பித்துவிட்டது. சொல்ல கஷ்டமாக இருந்தாலும், இளையவர்களுக்கு வழிவிட்டு, வழிகாட்டும் நேரம் வந்தே விட்டது. அதுதான் உண்மையும் கூட. தமிழ்நாடு ரஞ்சி அணி கூட நல்லா விளையாடும், தோனி தலைமையிலான அணி சொதப்புகிறது என்ற பேச்சு வர ஆரம்பித்துவிட்டது. பெயரும் புகழும் இருக்கும் போதே, ராஜமரியாதையுடன் விலகிவிடுவதே புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts