போனவாரம் கடையில் கால் கிலோ உலர் திராட்சை வாங்கி வந்தேன். வாயில் வைக்க முடியல. ஒரே இனிப்பு. சர்க்கரை பாகில் முக்கி எடுக்கப்பட்டது போல இருந்தது. எதிர் வீட்டு அக்கா, அவங்க வீட்டிலேயே உலர் பழங்கள் செய்வாங்க. பேசாமல் இனி அவங்க வீட்டுக்குப் போயே கற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். அவங்க சொல்வது போல திராட்சை பழங்களை உலரவிட்டு எடுத்தால், ஒரு வருடம் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாதாம். கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது.
முதலில் உங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு திராட்சை பழங்கள் வாங்கி கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை உப்பு நீரில் போட்டு, அரைமணி நேரம் ஊறவிட்ட பிறகு. மீண்டும் வெளியே எடுத்து கழுவ வேண்டும். பழம் நல்லா பளிச்சுன்னு மாறிடும். பிறகு இட்லி சட்டி எடுத்து, அதில் இட்லி ஊற்றும் ஒவ்வொரு குழியிலும் திராட்சை பழத்தை இடைவெளிவிட்டு நிரப்பி, பத்து நிமிடம் சுடு நீரில் ஆவியாகும் படி வேக வைக்க வேண்டும்.
வெந்த பிறகு, மேல் தோல் சுருங்கி விடும். ஒருவேளை சிலது வேகாமல் இருந்தால், மீண்டும் எவ்வளவு நேரம் உலர வைத்தாலும் காயாது. அதனை மீண்டும் எடுத்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு வெந்த பழங்கள் அனைத்தையும், ஒரு துணியில் பரவலாக கொட்டி மூன்று நாட்கள் வெயிலில் உலர விட்டாலே போதும். அவை கடையில் விற்கப்படும் உலர் திராட்சை அளவுக்கு மாறிவிடும். அதனை காற்று பூகாத ஜாடியில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கவர்களில் பத்திரப்படுத்தி, பிரிட்ஜில் வைத்து விட்டால் 1 வருடம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். கெட்டுப் போவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த வித கெமிக்கலும் கலக்காத உலர்திராட்சை, அதுவும் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும். கருப்பு திராட்சையிலும் இதை செய்யலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது ஈரப்பதம். மேற்புறம் அது இல்லாத அளவுக்கு உலரவிட்டால், பூஞ்சை பிடிப்பது இருக்காது.