புதிதாக கட்டிய வீட்டுக்கு அருகில், மரம் வைக்க வேண்டும் என முடிவெடுத்தோம். வீட்டின் ஆஸ்திவாரத்தை பாதிக்காத அளவுக்கு எந்த மரம் வைக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. ஒரு சிலர் பூவரசம் மரம் நடலாம் என்றனர். இன்னும் சிலர் பலா மரம் அல்லது மா மரம் வைக்கலாம் என்றனர். எனக்கு வேப்ப மரம் வைக்கலாம் என்று ஆசை. விதை போட்டால் அது சின்ன செடியாக வளர்ந்தது, மரமாக மாறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
எனக்கு தெரிந்த நண்பர் ஒரு பதியமிடும் முறை பற்றி கூறியிருந்தார். அவர் வளர்த்த விதம் குறித்த போட்டோவையும் அனுப்பி இருந்தார். அதனை பார்த்து பெரிய மரங்களுக்கான செடிகளை நானே உருவாக்கிக்கொண்டேன். எந்த மரமாக இருந்தாலும் சரி, அதனுடைய நேரான கிளைகளை வெட்டி ஒரு சாக்கு பையில் மண் நிரப்பி அதில் ஊன்றிவிட வேண்டும். பிறகு அதனை இலேசான வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து ஈரம் காயாத வகையில் தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.
மூன்றே மாதத்தில் அவை துளிர் விட ஆரம்பித்துவிடும். அதனை எடுத்து நமக்கு வேண்டிய இடத்தில் நட்டால், சீக்கிரம் சிறிய செடியாக வளர வைத்துவிடலாம். நண்பர் சொன்ன படி முயற்சி செய்து, இன்னைக்கு எங்க தெரு முழுக்க 10 மரங்களை இதே பாணியில் நட்டுள்ளோம். மா மரம் கூட இதே வழியில் நடவு செய்ய முடியும் என்கின்றனர். நான் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. உங்களுக்கு அதைப்பற்றி தெரிந்து இருந்தால், கீழே சொல்லலாம்.