இந்த ஊறுகாய், வற்றல் போன்ற உப்பு நிறைந்த பதார்த்தங்களை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென அமமாச்சி அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. நான் நான்கு வயது வரைக்கும் அம்மாச்சி வீட்டில் தான் வளர்ந்தேன். ஒருமுறை கூட ஊறுகாய் என் கண்ணில் காட்டியது இல்லை. ஊறுகாய் உப்பில் ஊறியது. அது கெடுதல் என்பார். ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுக்கு தான் உப்பு உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். அது குழம்பில் போடப்பட்டிருந்தாலும் சரி, மற்ற தீனிகளில் போடப்பட்டிருந்தாலும் சரி.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சர்வசாதாரணமாக 15 கிராம் உப்புக்கு மேல் எடுத்துக்கொள்கின்றனராம். ஆனால் கேரள மக்கள் 9 கிராம் வரைக்கும் தான் அதிகபட்சம் எடுத்துக்கொள்கின்றனர். நான் சொன்ன அளவு ஊறுகாய் எல்லாம் சேர்க்காமல். இதுவே ஊறுகாய் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுடைய கணக்கு 20 கிராமை தொட்டுவிடும். பொதுவாக உப்பு, இரத்தத்தை கெட்டியாக்கும் தன்மை கொண்டது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அல்சர் தொந்தரவு உடையவர்கள் ஊறுகாயை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கவும். ஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய், உப்பு மற்றும் காரம் சேர்ப்பதால் பொதுவாக சிறிய அளவில் எடுத்து கொள்ளலாம். அதிக நாள் உப்பில் ஊறிய ஊறுகாயை தினமும் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு, அது தொடர்பான பிற நோய்கள் வந்துவிடும். சிறுவயதிலேயே டயாலிசிஸ் செய்வோர் பலர் இப்படி அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக்கொண்டவர்கள் தான்.
என்னுடைய அக்கா மகனுக்கு 16 வயதாகிறது. அவனுக்கு மூன்று வயதில் இருந்து ஊறுகாய் சாப்பிட பழக்கப்படுத்தி, தினமும் ஊறுகாய் இல்லாமல் சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்தான். 15 வயதில் அவனுக்கு கால் வீங்கியது. ஹாஸ்பிடல் போய் பார்த்தா, சிறுநீரக கோளாறுன்னு சொன்னாங்க. 16 வயதில் அவனுக்கு டயாலிசிஸ் பண்ணியிருக்கோம். எதுவும் அளவு தான். ஒண்ணு உடம்புக்கு கெடுதல் என்று பெரியவர்கள் சொன்னால் அவங்க பேச்சை கேளுங்க. அக்கா மகன் வீம்புக்குன்னு பண்ணி, இப்போ புலம்பிக்கொண்டிருக்கிறான்.