மனிதனின் அன்றாட தேவைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது உணவு. அதிலும் சமீப காலமாக வெரைட்டி உணவை அதிகம் ரசித்து சாப்பிட தொடங்கிய மக்கள் உணவின் மீதான காதல் இதனால் அதிகமாகிறது என்றும் கூற தொடங்கிவிட்டார்கள். மேலும் புதிது புதிதாக சமையல் செய்து அசத்தும் ஹோட்டல்கள் தான் இன்றைய உணவு பிரியர்களை ஈர்த்து வருகிறது. இந்த விதமான புதிய உணவுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் காசு கொடுக்க உணவு பிரியர்கள் இருக்கிறார்களாம்

அந்த வகையில் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கடை ஒன்றில் ஒரு தோசையின் விலை 1000-க்கு விற்கப்படுகிறதாம். அப்படி என்ன அந்த தோசையில் இருக்கிறது என்றால், அந்த தோசையை சுற்றி உண்ணத்தகுந்த தங்க முலாம் பூசப்பட்ட காகிதம் சுற்றப்பட்டு இருக்கிறதாம். இந்த தோசைக்கு பெயர் "தங்க இழை தோசை" என்று சொல்லும் கடைக்காரர் ஒரு நாளைக்கு 20-க்கும் அதிகமான தங்க இழை தோசை ஆர்டர்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக விற்கப்படும் பிளைன், மசாலா மற்றும் இன்னும் பிறவகை தோசைகளை மக்கள் தொடர்ந்து சாப்பிட்டு சலிப்படைந்து இருக்கும் நிலையில் தற்போது இந்த தங்க இழை தோசை கர்நாடக மாநிலத்தை கலக்கிவருவதாகவும் தெரிவித்து இருக்கிறார் கடையின் உரிமையாளர். இப்படியே போனால் விரைவில் அடுத்தடுத்த உணவு பொருட்களிலும் தங்க இழையை சேர்த்துவிடுவார்கள் போல இருக்கே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்