சென்னை என்றதுமே பெரிய பெரிய கனவுகளோடும், சிறகடித்து பறக்கும் ஆசையோடும் இளம் பெண்கள் வேலை தேடி படையெடுக்கின்றனர். படித்த படிப்புக்கு முறையாக வேலை கிடைத்துவிட்டால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அலைந்து திரிந்து, எங்கோ ஒரு மூலையில் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு சேரும் பெண்கள், தினம் தினம் சீண்டல்களை அனுபவிக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வரும் அப்பாவி பெண்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியத்தில் ஒரு சில ஓனர் ஓநாய்கள் சுற்றுகின்றன.
சரி வேலை செய்யும் இடத்தில் தான் இப்படி என்றால், எல்லாம் முடித்து வெளியே போனாலாவது நிம்மதியாக இருக்கலாம் என்றால், அதற்கும் வழியில்லை. ஒன்று மட்டும் சொல்வேன். சென்னை மாதிரி பெரிய ஊர்களில் கை நிறைய சம்பளம் வருது. யாருடைய தயவையும் எதிர்நோக்கி இருக்கவில்லை என்றால் மட்டும் பெண்களை அனுப்பி வையுங்கள். எங்க ஊர் பெண் ஒருத்தி, வேலை தேடி சென்ற இடத்தில், பணத்தை தவறவிட்டுவிட்டாள். கூகுள் பே பற்றி எல்லாம் தெரியாது. சாதாரண பட்டன் போன் தான் அவளிடம் இருக்கும்.
பணம் பறிபோன வெசனத்தில், மொபைல் சார்ஜ் எவ்வளோ இருக்குன்னு கூட பார்க்கல. இரவு வரை அலைந்து திரிந்து கடைசியில், மொபைலும் ஸ்விட்ச் ஆப். புது ஊரு, அறிமுகம் இல்லாத மனுஷங்க என்ன பண்றதுன்னே தெரியல. கோயம்பேடு பஸ் ஸ்டேண்ட் சென்றவள். அங்கே ஒரு ஓரமாக பெண்கள் தூங்கிக்கொண்டிருந்த இடத்தில், துப்பட்டாவை போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறாள். வேறு யாராவது ஒருவரிடம் மொபைல் வாங்கியாவது வீட்டுக்கு தகவல் சொல்லியிருக்கலாம். பதற்றதில் எதுவுமே தோன்றவில்லை போலிருக்கு.
இரவு 1 மணிக்கு ஒருத்தன் வந்து எழுப்பிவிட்டு, 500 ரூபாய் தரேன். 1 மணி நேரம் மட்டும் வா என்று கூறியுள்ளான். இவளுக்கு அப்போ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்க படுத்திருந்த பல பெண்களிடம் இப்படித்தான் கேட்டுள்ளான். அவங்களும் அதிர்ச்சியடைந்து எழுந்தனர். எல்லாம் சேர்ந்து போலீஸ்கிட்ட போவதாக சொன்னதும் ஓடிவிட்டான். அங்கிருந்த பல பெண்கள் வேலை தேடியும், சென்னை என்ற மிதப்பில் வீட்டை விட்டு ஓடி வந்த பெண்களே. எல்லோருடைய நல்ல நேரம், தப்பித்து பஸ்-ஸ்டேண்டில் நிம்மதியா தூங்குறாங்க. இந்த மாதிரி வரும் பல அப்பாவி பெண்கள் 500 ரூபாய் கோஷ்டி ஆசாமிகளிடம் சிக்கி தினம் தினம் சீரழிந்துகொண்டிருக்கின்றனர்.