Hugs & Kisses

#Cute: இன்னும் தேனிலவில் இருந்து வெளிவராத தம்பதி! 3 வருடங்களில் முடிந்து போன முதல் திருமணம்!

Mar 20 2020

your image

ஒரு ஐரோப்பியர் ஒருவரை சில நாட்களுக்கு முன் சந்திக்க நேரிட்டது. அவரின் முதல் திருமணம் 3 வருடங்களில் முடிந்து போய் இரண்டாவது திருமணம் நடந்து 25 வருடங்கள் கடந்து விட்டன. எங்கள் உரையாடலில் பல நேரங்களில் அவர் தன் மனைவி மீது கொண்டிருந்த அளவிலா காதல் பிரம்மிக்க வைத்தது. வந்த வேலை ஒரு நாள் முன்னதாகவே முடிந்துவிட பிரயாணத்தை சுருக்கி கிளம்ப ஆயத்தமான வேளையில் கேட்டேன். வந்தது வந்தாகிவிட்டது. டிக்கெட் மறுநாளைக்கு தானே. ஒரு நாள் எங்கள் ஊரை சுற்றிப்பார்த்து விட்டு போகலாமே என்று.

அதற்கு அவர் என் மனைவி அங்கு காத்திருப்பாள். ஒரு நாள் முன்னதாக போனால் மிகவும் மகிழ்ச்சி கொள்வாள் என்றார்.

நம் நாட்டு கலாச்சாரம் அந்நிய நாட்டு கலாச்சாரங்களினால் சீரழிந்து போவதாக நம் மக்கள் பேசுவதை பல முறை கேட்டிருக்கிறேன்.

இவர் ஒருவரை உதாரணமாக கொண்டால், ஒத்து வராத திருமணத்திலிருந்து ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளாமல் வெளிவந்து விட்டனர். அன்பும், காதலுமாக 25 வருடமாக ஒருவள் இவரை இன்னும் ஈர்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவர் முக நூல் சென்று பார்த்தால் இருவரும் ஜோடியாக அங்கங்கு இன்னும் தேனிலவில் இருந்து வெளிவராத தம்பதியராக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சில நேரம் வளர்ந்த பிள்ளைகளுடன் குடும்ப சகிதமாக.

இவரை மட்டும் நான் வைத்து சொல்லவில்லை. நான் வெளிநாட்டிற்கு சென்றதில்லை. ஆயினும் வெளிநாட்டு புத்தகங்கள், நாவல்கள் என நிறைய படித்திருக்கிறேன்.

அன்பான, காதல் கடுகளவும் குறையாத மனைவி/கணவன்கள். பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அக்கறை, பாசம், அதே நேரம் அவர்கள் சுதந்திரமாக வாழ கற்றுக் கொடுக்கும் நேர்த்தி. வயதான தாய் தந்தையர் மேல் வைத்திருக்கும் மரியாதை. இதிலெல்லாம் போலித்தனமில்லை.

பிடித்த வாழ்க்கை, பிடிக்காத வாழ்வை வெளிப்படையாக பேசி பிரியும் தன்மை. இதிலெல்லாம் இல்லாத மனிதம், வேறெதில் இருக்க முடியும்?

தினமும் கேவலமாக சண்டை போட்டுக்கொண்டாவது இதெல்லாம் இருந்தால் தான் இயல்பு என ஏமாற்றிக்கொண்டு, பிள்ளகளை பாசம் என்ற பெயரில் பொம்மைகளாக பாவித்துக் கொண்டு, தாய் தந்தையர் தெய்வம் என பேசி வீட்டிற்குள் அவர்களை தூசுக்கு கூட மதிக்காமல் காயப்படுத்திக் கொண்டு, நாம் பேசுகிறோம் இழிவாக வெளி நாட்டவர்களின் கலாச்சாரம் கேடுகெட்டதென.

இதற்கு, தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றி நம்மை சுற்றி சிறை அமைத்துக்கொள்ளும் நாம், இதை எல்லாம் சிந்திக்கலாம் என்கிறார் எழுத்தாளர் லதா.

Top