ஒரு காலத்தில் பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாக பிரிந்து இருந்தது. இந்தியாவின் வடமேற்கு முனையில் உள்ள தற்போதைய பாகிஸ்தானும், இந்தியாவின் கிழக்கு முனையில், மேற்கு வாங்காளத்திற்கு கீழே பங்களாதேஷ் நாடு உள்ள பகுதி கிழக்கு பாகிஸ்தானாகவும் இருந்தது. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டதை போல இந்தியா நடுவில் அமைந்திருந்தது. மேற்கு பாகிஸ்தானில் இருந்து, விமானம் மற்றும் தரைவழி போக்குவரத்து மூலம் கிழக்கு பாகிஸ்தானை அடைய வேண்டும்.
எதுவாக இருந்தாலும் இந்திய எல்லையை கடந்தே போக வேண்டி இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாகிஸ்தான், போக்குவரத்து என்ற பெயரில், அவர்களின் உளவு அமைப்பை வைத்து பல்வேறு சித்து வேலைகளை செய்ய ஆரம்பித்தது. யாராக இருந்தாலும், ஓரளவுக்கு தான் பொறுத்துபோக முடியும். பாகிஸ்தானின் கொட்டம் அதிகமானதால், இந்தியா வழியே கிழக்கு பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. வான்வழியில் விமானம் பறக்க விதிக்கப்படும் தடையும் இதில் அடங்கும்.
இதனால் பாகிஸ்தான் விமானங்கள் ஆப்கானிஸ்தான், சீனா வழியாகவோ அல்லது இலங்கை வழியாகவோ சுற்றி கொண்டு போக வேண்டிய நிலை உண்டானது. அந்த நேரம் பார்த்து, தனித்த நிலையில் கிழக்கு பாகிஸ்தான் இருந்ததால், எந்த வசதிகளும் தங்களுக்கு செய்துகொடுக்க வில்லை என்று கூறி மக்கள் புரட்சி வெடித்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, உளவு அமைப்பான "ரா"வின் திறமையை பயன்படுத்தி, பாகிஸ்தான் மீது விமான கடத்தல் புகார் முன்வைத்தது.
ஒரு பக்கம் கிழக்கு பாகிஸ்தானில் மக்கள் புரட்சி, இன்னொரு பக்கம் வான் வழி போக்குவரத்து தடை என பாகிஸ்தான் விழி பிதுங்கி நின்று கொண்டிருந்த வேளையில், "பங்களாதேஷ்" என்ற நாடு இந்தியாவின் துணையோடு உருவானது. முழுக்க முழுக்க இந்திய உளவு அமைப்பான "ரா"வின் திறமையினால் மட்டுமே இது சாத்தியமானது. பிற நாடுகள் என்ன நடந்தது என்று யூகிக்கும் முன்பே, அனைத்தையும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது இந்திய அரசு.