Misc

#kasiyatra: காசி யாத்திரை செல்பவர்கள் ஏதோ ஒன்றை விட்டுவிட்டு வர வேண்டும் என சொல்வதன் பின்னணி?

Feb 17 2020

காசியில் உயிரை விட வேண்டும் என கூறிக்கொண்டு, காசி சென்ற எங்க பக்கத்து வீட்டு தாத்தா 14 நாளிலே திரும்பி வந்துட்டார்.

'என்ன தாத்தா!, போன வேகத்துல திரும்பி வந்துட்டீர்' என எங்க தெரு ஜனம் எல்லாம் அவரை விசாரிக்க ஆரம்பிச்சோம். தாத்தா அவரோட பயண அனுபவம் குறித்தும் காசி குறித்தும் கூறிய விஷயங்கள்  எங்களை வியப்பில் ஆழ்த்தின. அவர் கூறியவை,  

'காசி லபஹ் முக்தி பவன்' னு ஒரு விடுதி இருக்குடா தம்பி!  அங்கு போனதும் ஒரு விதிமுறையை  சொன்னாங்க!  இங்கு தங்குவதற்கு  நீங்க 14 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள். 14 நாட்களுக்குள் இறக்காவிட்டால் ரூமை காலி செய்துவிடவேண்டுமாம். என் கூட வந்த எல்லா பெருசுங்களுக்கும் ஷாக்! 

தாத்தா..! உங்க பசங்க உங்களை சந்தோஷமாகத்தானே வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் அங்கு போனீங்க?

இல்லடா கண்ணா..! நான் சாவதற்கு அங்கு செல்லவில்லை. யாத்திரை செல்ல வேண்டும் என்பதற்காகவே சென்றேன். எதிர்பாராத விதமாக இந்த விடுதி குறித்து கேள்விப்பட்டோம். அதனாலே அங்கு சென்றோம். 14 நாட்கள் எத்தனை அனுபவங்கள் தெரியுமா? அங்கிருந்த ஒவ்வொரு பெரியவர்களிடமும் பேசினேன். கலங்காத என் கண்கள் அன்று கசிந்தன.

தாத்தா..! எங்களுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு,விவரமா சொல்லுங்களேன்.

விடுதியில் ஒரு உயிர் இழுத்து கொண்டிருந்தது. அவரை பார்க்க ஒரு குடும்பம் வந்தது. அதில் ஒரு வயசானவர் இருந்தார். அவர் வந்து பேசியதும், இழுத்து கொண்டிருந்த உயிர் பிரிந்தது. மரண படுக்கையில் இருந்தவரும், அவரிடம் வந்து பேசியவரும் சகோதரர்களாம். 40 வருடமாக பேசிக்கொள்ளவில்லையாம். ஒரே வீட்டில் வசித்தவர்கள் தான். ஆனால் வீட்டின் நடுவே சுவர் எழுப்பி 40 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளனர். பேசாமல் இருந்த இறந்தவரின் தம்பி வந்து 'நீ நல்லாயிடுவன்னு' சொன்னதும் அந்த உயிர் பிரிந்தது..இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தவர்களாம், சொத்து விவகாரத்தின்  வீம்பால் உறவை முறித்துக்கொண்டுள்ளார்கள். இப்படி பல விஷயங்கள் என் கண்முன்னே நடந்தது.   

வேறு என்ன நடந்தது தாத்தா!

வாழ்க்கை முழுக்க நான் பணத்தின் பின்னாடியே சென்றதால் என் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இனிய தருணங்களை நினைத்து என்னால் அசைபோட முடியவில்லை. ஏனெனில் என் வாழ்வில் இனிய தருணமே குறைவு. நீங்களும் என்னைப்போல இல்லாமால் அழகான தருணங்களை உருவாக்கி கொள்ளுங்கள்.

அப்புறம் ஒரு சந்தேகம் தாத்தா! காசி யாத்திரையின் போது தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டு வர வேண்டும் என்கிறார்கள். நீங்க எதை விட்டு வந்தீர்கள்?  என் மாமா காசி போன போது உருளைக்கிழங்கு சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டாராம். உண்மையில், மருத்துவர்கள்  அவரை உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.அதனாலே விட்டுள்ளார். 

ஓஓஓ..!(புன்சிரிப்புடன்) என்ன ஒரு தியாகம்..! அதாவது அகங்காரம், ஆணவம், குரோதம், இச்சை, பேராசை இது போன்ற வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் அவற்றை விலக்கி வைத்து பற்று அகற்ற வேண்டும்.

தாத்தா..! பிறகு ஏன் யாத்திரையில் ஏதாவது ஒரு காய் அல்லது பழத்தை விட வேண்டும் என்கிறார்கள்? 

அதாவது உன்னிடம் உள்ள நல்ல பழக்கங்கங்கள் தொடர பழம் விட வேண்டும், கெட்ட பழக்கம் அகல காய் விட வேண்டும்.  அகங்காரம், ஆணவம், குரோதம், இச்சை, பேராசை அகல நினைப்பவர்கள் ஏதோ ஒரு காயை விடலாம். நல்ல பண்பு, பெரியோரை மதித்தல் போன்ற நல்ல பழக்கம் தொடர நினைப்பவர்கள் ஏதோ ஒரு பழத்தை விடலாம்.

எந்த காயை வேணுமானாலும் விடலாமா தாத்தா?

ம்ம்ம்..! டாக்டர் சொன்னாருன்னு விடுவதற்கு யாத்திரை ஏன் போகணும்? 

ஆமாங்க தாத்தா! பல பேர் சடங்கு சம்பிரதாயத்தை தவறாக திரிச்சு புரிந்து வைத்துருக்காங்க!  

சரி எல்லோரும் போய் தூங்குங்க! நாளை இன்னொரு அனுபவத்தை சொல்றேன்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top