Out of Box

#coronoholidays: கொரோனா கொடுத்த வாய்ப்பு! பெற்றோர்களே சரியான நேரம், உளியை எடுத்து செதுக்க ஆரம்பியுங்கள்!

Mar 23 2020

கொரோனாவின் பீதி இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் தொற்றியுள்ளது என்பதை நேற்று கண்கூடாக உணர்ந்தேன். முன்னரெல்லாம் வீட்டில் தும்பினால், தீர்க்காயுசு என்பார்கள், இப்போது 'அய்யோ தீராத வியாதி தூர ஓடு' என்கிறார்கள். முதலில் காய்ச்சல் இல்லாமல் வறட்டு இருமல் வந்தால், 'யாரோ திட்டுகிறார்கள் போலிருக்கே!' என்பார்கள். இப்போது இருமினாலே திட்டுகிறார்கள். உங்களது ஊரில் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் இருப்பது உறுதியாகி இருப்பின், முடிந்தவரை வெளியே போகாமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். இது பரவும் தன்மை, நம்மால் யூகிக்க முடியாத ஒன்று. அரசே இதனை உணர்ந்து பாதிப்புள்ள காஞ்சிபுரம், ஈரோடு, சென்னை மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. கண்டிப்பாக நேரம் கடப்பது, சிரமமாகத்தான் இருக்கும் என்பது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மார்ச் 22 அன்றே புரிந்திருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு கிடைத்துள்ள இந்த விடுமுறையில்,  வெளியே போகாமல் ஒரே இடத்தில் இருப்பது கடினமானதாக உணர்வார்கள். அப்போது, அவர்களை உபயோகமுள்ள சில விஷயங்களில் அர்ப்பணித்து கொள்ள செய்யுங்கள். உதாரணத்திற்கு,

#1. அமர்ந்து விளையாடும், அதே நேரம் யோசிக்க வைக்கும் விளையாட்டுக்களை கற்றுக்கொடுங்கள். கேரம், செஸ் என எப்போதும் போல் இல்லாமல் பல்லாங்குழி, தாயம், கவனத்தை அதிகரிக்க செய்யும் ஐந்து கல் விளையாட்டு என எல்லாவற்றையும் சொல்லிக்கொடுங்கள். 

#2. வீடு பெரிதாக சவுகரியமானதாக இருந்தால், கண்ணை கட்டி ஒளிந்து விளையாட சொல்லுங்கள். ஊரடங்கு உத்தரவில், எங்கள் வீட்டில் நடந்த கலாட்டா. உடலுக்கு வேலை கொடுத்தது போல் இருக்கும். இப்படி தினமும் ஏதோ ஒரு கேம் ப்ளேன் செய்யலாம்.  

#3. அழகு கலையில் ஆர்வமுள்ளவர்கள் என்றால், மெகந்தி போட பழக்குங்கள். இதனை அடுத்து ஓவியம் வரைய பழக்குங்கள். அதற்கான கிட்டை ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

#4. குடும்பத்தோடு டிவியில் மேட்னி ஷோக்கு ஏற்பாடு செய்யுங்கள். என்ன படம் பார்க்கலாம் என விவாதியுங்கள். இரவு விடியவிடிய ஹாரர் படங்களை டவுன்லோடு செய்து பாருங்கள். குடும்பத்தோடு படுத்துக்கொண்டு பேய் படம் பார்ப்பது எல்லாம் வேற லெவல் என்ஜாய்மென்ட். 

#5. வரலாற்றை கதையாக சொல்லிக்கொடுங்கள். அவர்களையும் கதை சொல்ல பழக்கப்படுத்துங்கள்.

#coronoholidays: ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது, முதன்முறையாக சீனாகாரன் 100% போலியே இல்லாத பொருளை ஏற்றுமதி செய்துட்டான். பெரியவர்களும் வீட்டில் இருக்கும் நிலை வந்தால், புத்தகம் படியுங்கள். ஆசை ஆசையாக பிடித்த புத்தகத்தை வாங்கி இருப்போம். ஆனால் வருடமே கழிந்திருக்கும், கண்டிப்பாக அதில் இருபது பக்கம் கூட கடந்திருக்காது. நேரமின்மை என ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவோம். இப்போது கொரோனா கொடுத்த நேரத்தை, புத்தகத்திற்கு செலவிடலாம். 

Top