HotPicks

#flavorfulfat: வித்தியாசமாக நெய் செய்யலாம், வீட்டிலேயே!

Mar 20 2020

கடையில் வாங்கும் நெய்க்கும் வீடுகளில் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. உதாரணத்திற்க்கு மணத்தை வைத்து வித்தியாசம் கண்டுபிடித்துவிடலாம். வீட்டில் செய்யும் நெய் என்றால், சுடு சாப்பாட்டில் ஊற்றியதும் உருகி, கமகமவென மணம் வீசும். கடை நெய் என்றால் இது போன்ற அனுபவங்கள் அரிது தான். சிலருக்கு வீட்டிலேயே நெய் செய்யத் தெரியாத காரணத்தால், கடையில் வாங்குவதை வழக்கமாக்கிவிடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு.

பசும்பாலை காய்ச்ச அதன் மேல் ஒரு லேயர் உருவாகும். அதனை அன்றாடம் எடுத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வையுங்கள். பதினைந்து நாட்களுக்கு பின்னர் போதுமான அளவு வந்திருக்கும். அப்போது, அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வையுங்கள். பின்னர் கட்டி போல இருக்கும் பாலாடையை, சிறுசிறு துகள்களாக மாற்றி சிறிய பாத்திரத்தில் போடவும்.

முக்கிய குறிப்பு: பாலாடையின் முழு குளிர்ச்சி தன்மை நீங்குவதற்குள் மேற்கண்ட வேலையை செய்துவிடுங்கள். இல்லையெனில் வெண்ணெய் திரண்டு வருவது சிரமமாகி விடும். குளிர்ச்சி தன்மை நீங்கிவிட்டால் கூட, ஐந்தாறு ஐஸ் கட்டிகளை கடையும் போது சேர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் விட்டு கடையவும். வெண்ணெய் திரண்டு வர, அதிகபட்சம் இருபது நிமிடங்கள் ஆகலாம்.

பிரிந்த வெண்ணெய்யை அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்கவும். தண்ணீர் வற்றி, வெண்ணெய் உருக ஆரம்பிக்கும். இதில் வெள்ளை துகள்கள் மேலே மிதக்கும், அவை பொன்னிறமாக மாறும்வரை காய்ச்சவும். இந்த நிலையில் உப்பு மற்றும் முருங்கைத் தழையை போடவும். முருங்கைத் தழை பொரிய, இப்போது ஒருவாசனை வரும். மூக்கை எடுக்காமல் மோப்பம் பிடித்துக்கொண்டே இருக்க தோன்றும்.

ஆறிய பிறகு, வடிகட்டி சேமிக்கலாம். மீதமுள்ள பொரித்த முருங்கைத் தழையை சுடு சோற்றில் பிசைந்து உண்ணும் போது, உலகின் தலைசிறந்த உணவுகள் தோற்றுவிடும். கிராமங்களில் நெய் காய்ச்சிய பிறகு, இந்த அடிவண்டலை பெரிய சட்டியில் சாப்பாட்டுடன் பிசைந்து கொடுப்பார்கள். எப்போது நெய் காய்ச்சுவார்கள், ஒரு உருண்டை வாங்கி சாப்பிடலாம் என ஒரு கூட்டம் காத்திருக்கும்.                 

Top