தமிழகம் முழுவதும் நேற்று வெற்றிகரமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. ஆனால் அதைவிட ஒரு விஷயம் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் மட்டும் தான் மிகக் குறைந்த அளவு மக்கள் தங்கள் வாக்குகளை பதிவிட்டுள்ளனர். இது உண்மையிலேயே பேச வேண்டிய மிக முக்கியமான விஷயம் தான்.
மற்ற சிறிய மாவட்டங்களில் கூட 80 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆனால் சென்னையில் வெறும் 59 சதவீதம் மக்களே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை தான் கெத்து, சென்னை தான் தமிழகத்தின் தலைநகரம் என்று வெட்டி பந்தா செய்து கொண்டவர்கள் எல்லாம் எங்கு சென்றீர்கள்?
சென்னையில் மட்டும் தான் அதிக அளவு படித்த மக்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள படித்த மக்கள் எல்லோரும் தங்கள் சொந்த நகரத்தை விட்டுவிட்டு சென்னைக்கு சென்று குடியேறிவிட்டார்கள். ஒரு வேலை உங்கள் அனைவருக்கும் உங்கள் சொந்த தொகுதியில் வாக்கு இருந்தால் நிச்சயம் மற்ற மாவட்டங்களில் வாக்கு பதிவு குறைந்திருக்கும். ஆனால் சென்னையில் வாழும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த தொகுதிக்கு சென்று வாக்கு பதிவு செய்துவிட்டார்கள். அது உண்மை. அதனால் தான் மற்ற மாவட்டங்களில் வாக்குப் பதிவு பெரிய அளவில் குறையவில்லை.
பின்னர் சென்னையில் மட்டும் ஏன் வாக்கு பதிவு குறைந்த அளவில் உள்ளது? உங்களுக்கு வெயிலில் சென்று ஓட்டு போட பிடிக்கவில்லை போல. நம்ம போடுற ஒரு ஓட்டுனால இந்த தமிழகத்தில் என்ன மாற்றமா வந்துவிட போகுது என்று நினைத்துவிட்டீர்கள் போல. நாட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை நடந்தால் மட்டும் கூட்டம் கூடி போராட்டம் செய்ய தெரிந்த சென்னை மக்களுக்கு ஓட்டு போட நேரம் இல்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது.
நேற்று ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபலங்கள் ஓட்டு போட செல்லும்போது கூடிய கூட்டத்தில் பாதி பேராவது வாக்களித்திருந்தால் நீங்கள் தான் தமிழகத்திற்கு முன்னோடியாக இருந்திருப்பீர்கள். என்ன செய்வது? நீங்க பிரபலங்களை பார்க்கத் தானே கூட்டம் கூடுவீர்கள். மக்களுக்கு நல்லது நடக்கக் கூடிய ஜனநாயக கடமையை செய்வதற்கு செல்ல உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்த முறை எந்த கட்சி வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கேள்வி கேக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டீர்கள். இனி சமூக வலைத்தளங்களில் தமிழகம் சம்மந்தமாக எந்த கோரிக்கைக்கும் நீங்கள் யாரும் குரல் கொடுக்க வேண்டாம். வாக்களித்த மற்ற மாவட்ட மக்கள் இனி குரல் கொடுப்பார்கள். நீங்கள் நேற்று எப்படி ஓட்டு போட செல்லாமல் வீட்டில் அமர்ந்து மிச்சர் சாப்பிடீர்களோ அதே போல இன்னும் 5 வருடங்கள் அதே நிலையை தொடருங்கள்.
மற்ற மாவட்டங்களை விட நீங்கள் தான் அதிக வசதியை அனுபவிக்கிறீர்கள். மெட்ரோ ரயில், கப்பல் வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, பெரிய பெரிய IT நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்லூரிகள் என அனைத்து வசதிகளும் இருந்தும் அந்த அனைத்து வசதிகளையும் நீங்கள் பயன்படுத்தியும் உங்களுக்கு ஓட்டு போட பிடிக்கவில்லை. இதே போல எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் தொகுதியில் உள்ள மக்கள் நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
அனைவரும் நம்மை யார் ஆள வேண்டும், ஒரு மாற்றம் வேண்டும் என்ற முனைப்பில் தான் வாக்களிக்க சென்றார்கள். உங்களுக்கு வாக்களிக்க பிடிக்கவில்லை என்றால் குறைந்தது நோட்டா சின்னத்திலாவது வாக்களித்திருக்கலாம். ஆனால் நீங்கள் யாரும் அவ்வாறு செய்யவில்லை. நன்றி சென்னை மக்களுக்காக வெள்ளத்தின் போது உதவிய மற்ற அனைத்து மாவட்ட மக்களையும் நீங்கள் ஏ மாற்றி விட்டீர்கள். தலைநகரம் சென்னையில் தான் மிகக்குறைந்த வாக்குப்பதிவு என்று இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறது. நீங்கள் செய்த சிறப்பான சம்பவத்திற்கு இன்று தமிழ்நாடே தலை குனிந்துள்ளது.